நானும் என் எழுத்தும்






கோவையை அடுத்த கீரநத்தம் என்னும் சிற்றூரில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்ததால் பள்ளிக்கு அனுப்பினார்கள். இல்லாவிட்டால் இரண்டு மாடு வாங்கிக் கொடுத்து மேய்க்கப் பள்ளம் படுக்கைக்கு அனுப்பியிருப்பார்கள். உள்ளூரில் தொடக்கக் கல்வி முடியும் தருவாயில், பக்கத்து ஊரில் சுதந்திரம் பெற்றதைக் கொண்டாடும் வகையில், அந்த வட்டாரத்துப் பெரிய மனிதர்களெல்லாம் கூடி, நன்கொடை பெற்று உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கினார்கள். சுதந்திர உயர்நிலைப் பள்ளி! அது மட்டும் இல்லாதிருப்பின், எங்கள் பகுதியில் பலருடைய படிப்பு தொடக்கக் கல்வியோடு நின்று போயிருக்கும்! இன்று அங்கே படிப்பு முடிந்து, ஆசிரியர்களாக, அலுவலர்களாக, ஏன் நீதிபதியாகக் கூடப் பலர் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள். வானம்பாடிக் கவிஞர் புவியரசு, முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் போன்றோர் இப்பள்ளியில் பணியாற்றியவர்களே!

பள்ளிப் படிப்பின்போது 'கல்கண்டு' படித்துக் கொண்டிருந்த எனக்கு மு.வ.வையும் கி.வ.ஜ.யையும் படிக்கத் தூண்டிய தமிழாசிரியரை மறக்க முடியாது. (அக்காலத்) தமிழாசிரியர்களுக்கு மாணவர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டி வளர்ப்பதில் எத்துனை ஆர்வம்! அதெல்லாம் பொய்யாய், பழங்கதையாய்ப் போய்விட்டதே!

எஸ்.எஸ்.எல்.சி படித்துத் தேர்ச்சி பெற்றாகி விட்டது. அடுத்து என்ன செய்வது? உடன் பயின்றவர்களெல்லாம் பெரியநாயக்கன்பாளையம் இராமகிருஷ்ண வித்யாலயத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து விட்டார்கள். வித்யாலயம்தான் எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உருவான அச்சாணி எனலாம்! அதன் நிறுவனர் அய்யா அவினாசிலிங்கம் அவர்கள் கல்விப் பணி போற்றற்குரியது.

நண்பர்கள் எல்லாரும் ஆசிரியப் பயிற்சியில் சேர, எனக்கு மட்டும் கல்லூரியில் சேர வேண்டும் என்ற (குருட்டு) ஆசை. அப்போது கோவையில் இரண்டே கல்லூரிகள். ஒன்று பீளமேடு பூ.சா.கோ. கல்லூரி. இன்னொன்று கோவை அரசுக் கல்லூரி.

பூ.சா.கோ. கல்லூரிக்குப் போனேன். மதிப்பெண்ணைப் பார்த்ததும், முதல்வர் உடனே சேர்த்துக் கொண்டார். எல்லாம் சரி, எப்படிக் கல்லூரிக்குத் தினமும் போவது? ஊரிலிருந்து பதினைந்து மைல், (அப்போது கிலோ மீட்டர் கிடையாது), பஸ் வசதி கிடையாது. பஸ்ஸே இருந்தாலும், போய் வர பணவசதி இல்லை. இருக்கவே இருக்கிறது 'ராலே' சைக்கிள். எப்படியோ அழுது புரண்டு சைக்கிள் வாங்கி, என் கல்லூரிப் பயணம் தொடங்கியது.

அங்கேதான் ம.ரா.போ. எனும் மாமேதையின் தரிசனம் கிடைத்தது. என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு 'இலக்கியம் என்றால் என்ன?' என்பதை அவர்தான் அழகாகச் சொல்லிக் கொடுத்தார். பாரதிக்கு நான் அடிமை ஆனது அவரால்தான்! ஆனால் எங்கள் துரதிர்ஷ்டம் அப்போது அக்கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பு மட்டும்தான். இளங்கலை வகுப்பில் சேர கோவைக்குப் படையெடுத்தேன். அங்கு பொருளாதாரப் பிரிவில் இடம் கிடைத்தது. மீண்டும் சைக்கிள் பயணம்! காற்றிலும் மழையிலும், வெயிலிலும்... இதென்ன ஒரு கஷ்டமா?

அங்கேதான் எத்தனை பேராசிரியர்கள்! 'உன்னி' என்பவரிடம் ஷேக்ஸ்பியர் பாடம் கேட்கத் தவம் செய்திருக்க வேண்டும்! ஆங்கிலத்தில் "See Naples and Die" என்பார்கள். அதாவது நேபில்ஸ் நகரின் அழகைப் பார்த்துவிட்டுத்தான் சாக வேண்டுமாம்! அதுபோல, உன்னியிடம் ஷேக்ஸ்பியர் பாடம் படித்துவிட்டுச் செத்துவிடலாம்! அப்படி ஒரு ஆங்கிலப் பேராசிரியர் வாய்த்தது அன்றைய கோவைக் கல்லூரி பெற்ற பேறு!

வழக்கம் போல் ஆண்டுவிழா, கவிதைப் போட்டி, பாரதியைப் படித்தபின் கவிதை எழுதாமல் இருக்க முடியுமா? போட்டியில் கலந்தேன். முதல் பரிசு. தலைப்பு 'கனவு'. அதனால்தான் என்னவோ வாழ்க்கையே கனவாகிவிட்டது. நண்பர்கள் சும்மா இருப்பார்களா? "நீ கவிஞனாகி விட்டாய். எழுது, எழுது" என்று தூண்டுகோல் போட்டார்கள். அதிலும் குறிப்பாக, சூலூரிலிருந்து, என்னைப் போலவே சைக்கிளில் கல்லூரிக்கு வரும் இனிய நண்பன் இரா. நஞ்சப்பன் தீவிர இலக்கிய வெறியன். 'லக்கி' ஓட்டலில் ஓரணாவிற்கு டீ குடித்தபடி என் கவிதைகளை ஒவ்வொரு வரியாக ரசித்து தட்டிக் கொடுத்ததை, கட்டையில் வேகும் வரை மறக்க முடியாது. அவன்தான் எனக்கு மார்க்ஸையும் மாக்சிம் கார்க்கியையும் அறிமுகம் செய்து வைத்தான். பின்னாளில் 'புதிய தலைமுறை' எனும் சீரிய சிறப்பிதழுக்குக் களம் அமைத்துக் கொடுத்தான். கவிஞனாகப் பிறப்பெடுத்த பின்னர், பத்திரிக்கை உலகிற்குள் பிரவேசிக்காமல் இருக்க முடியுமா? கிராமத்து ஏழைச் சிறுமியின் வறுமைக் கோலத்தை 'எழில்' என்ற தலைப்பில் கவிதையாக்கி அண்ணாவின் 'திராவிட நாடு' வார இதழுக்கு அனுப்பி வைத்தேன் என்ன ஆச்சரியம்! அடுத்த வாரமே 'திராவிட நாடு' இதழில் முதல் பக்கத்தில்- தலைப்பில்- அக்கவிதை வெளிவந்துவிட்டது. அவினாசி சாலையில் 'பாய்' கடையில் 'திராவிட நாட்'டை வாங்கிப் பார்த்ததும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! அதுதான் அண்ணா! அந்த மனித நேயத்தை - மற்றவர்களை முன்னிலைப்படுத்தும் மகோன்னதப் பண்பை என்னவென்று சொல்வது! என்னிடம் வார்த்தைகள் இல்லை. இப்போது யார் அப்படி ஊக்குவிப்பார்கள்? ஹூம்....

பிறகு 'நவ இந்தியா', 'தென்றல்', 'தென்றல் திரை', 'போர்வாள்' என என் கவிதைப் பயணம் தொடர்ந்தது. ஆனால் யாரும் சன்மானம் என ஒரு ரூபாய் தரவில்லை. கவிதையை வெளியிட்டதே எனக்குக் கிடைத்த பெரிய சன்மானம்!

அடுத்த கட்டம்- தொகுப்பு வெளியீடு. கோவையில் அப்பொழுது 'மெர்க்குரி புக் கம்பெனி' முக்கிய பதிப்பகம். அதன் வாயிலாக 'பருவங்கள்' எனும் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். யாரும் கண்டு கொள்ளவில்லை. 'இந்து' நாளிதழ்தான் சிறு மதிப்புரை எழுதியது.


சந்தை கலையும்போது, சந்தைக்கு சாமான் வாங்க, சாக்கை எடுத்துப் போவது போல், மரபுக் கவிதையின் மவுசு குறைந்த கால கட்டத்தில் மரபைச் சிக்கெனப் பிடித்தது, நான் செய்த பெரும் பிழை. அதற்காக எல்லோரையும் போல, என்னால், புதுக்கவிதைக்குத் தாவ முடியவில்லை. அதற்கு ஒரு 'பொறி' வேண்டும். படிமம், குறியீடு, உருவகம் எல்லாம் வேண்டும். அதெல்லாம் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது. எனக்குத் தெரிந்ததெல்லாம் சந்தம். சந்தம் மட்டுமே. கவியரசு பாடியது போல், "அவனவன் எல்லையைப் புரிந்து கொண்டவன் புத்திசாலி".ஆம், புத்திசாலித்தனமாக என் கவிதைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இதனால் தமிழ் கவிதையுலகுக்கு இம்மியளவும் இழப்பில்லை.

எனினும் நான் வாழும் சுற்றுப்புற மக்களின் - குறிப்பாக விவசாயிகளின் - விவசாயத் தொழிலாளிகளின்- வாழ்க்கை அவலங்கள் என் மனத்தைக் கீறிக் கொண்டே இருந்தன. கோவை தொழில் நகராகத் திகழ்ந்தாலும், சுற்றியுள்ள கிராம மக்களில் பெரும்பாலோர் நிலத்தை நம்பி வாழ்வைத் தேடும் சிறு,  குறு விவசாயிகள். இங்கு மழை போதிய அளவு என்றுமே- என் நினைவு தெரிந்தவரை - பெற்றதே இல்லை. ஆறுகளும் இல்லை. குலம் குட்டைகளெல்லாம் வருவாய்த் துறையின் பதிவேட்டில் மட்டும் உள்ளன. ஆகவே விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரம் நிலத்தடி நீர். அது ஆண்டுக்கு ஆண்டு அதளபாதாளத்திற்குப் போய் கொண்டிருக்கிறது. கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்தால் அதோ கதிதான். காவேரிப் படுகையில் முப்பது அடி போர் வெல் போட்டால் தீராத தண்ணீர் கொப்பளிக்கும். இங்கு முன்னூறு அடி போர்வெல் போட்டாலும் புகைதான் வரும், தண்ணீர் வராது. இருந்தாலும் இவர்கள் போராட்டம் இயற்கையோடு மட்டுமின்றி அரசோடும் கூட! கூடுதல் மின் கட்டணத்தை எதிர்த்து எழுபதுகளில் கோவை விவசாயிகள் நடத்திய போராட்டமும் அதனால் ஏற்பட்ட உயிர்ப்பலியும் வரலாற்றில் உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை. இதையெல்லாம் கண்ணெதிரே பார்த்து, மனம் வெதும்பி, இவர்கள் வாழ்வின் அவலத்தைப் பதிவு செய்ய, நான் எடுத்துக் கொண்ட சிறுமுயற்சிதான் எனது 'நந்தியா வட்டம்' நாவலாக பரிணமித்தது. இதைப்பற்றி 'சிரியன சிந்தியாதான்' அமரர் வல்லிக்கண்ணன் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்:
"நந்தியா வட்டம்" நாவலைப் படித்து மகிழ்ந்தேன். பொதுவாக எழுதப்படுகிற நாவல்களில் இருந்து, 'நந்தியாவட்டம்' மாறுபட்டு இருக்கிறது. கதை அம்சம், சம்பவப் பின்னல் போன்ற விஷயங்கள் இந்த நாவலில் இல்லை. ஆனால் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள், வாழ்க்கைப் போராட்டம் போன்றவற்றை இந்த நாவல் சுவாரசியமாக விவரிக்கிறது. கோயமுத்தூர் வட்டாரத்தில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் சிரமங்களையும் சிக்கல்களையும், பிரச்சினைகளையும் எடுத்துச் சொல்கிறது. சாமானியர்களின் ஆசைகள், விருப்பு வெறுப்புகள், லட்சியங்கள், சடங்குகள் முதலியவற்றை நன்கு பதிவு செய்துள்ளது."
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 2006ல் இந்நாவலுக்கு சிறந்த புதினமெனப் பரிசு வழங்கியது.

புறக்கணிப்புகளுக்கு மத்தியில் இவையெல்லாம் புத்துணர்வு ஊட்டியதால், தொடர்ந்து எழுதி வருகிறேன். அதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் புதுமைப்பித்தன் கூறியதைப் போல், வாழையடி வாழையாக வரும் யாரோ ஒரு வாசகர் என் எழுத்தைப் படிக்காமலா போய் விடுவார்?

(கோவை மாவட்ட தமிழ்ப் பேரவை மற்றும் தமிழ்நேயம் ஆகிய அமைப்புகள் இணைந்து திரு கோவை ஞானி (கி. பழனிச்சாமி) அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியிட்ட "தமிழ் எழுத்தாளர்கள் வாழ்வும் படைப்பும் (கோவை வட்டாரம்)" என்ற  நூலில் திரு பழமன் அவர்கள் எழுதிய கட்டுரை)

4 comments:

Giri Ramasubramanian said...

//யாரோ ஒரு வாசகர் என் எழுத்தைப் படிக்காமலா போய் விடுவார்?//

அப்படி நான் இன்று படிக்க நேர்ந்தது!

ஒரு வாழ்க்கையையே இத்தனை சுலபமாக நான்கைந்து பத்திகளில் எழுதிவிட்டீர்கள்.

உங்கள் நெடிய அனுபவத்திற்கு என் வணக்கங்கள்!

மெய்வேந்து said...
This comment has been removed by the author.
மெய்வேந்து said...

வணக்கம். எழுத்தாளர் பழமன் அவர்களின் ஒத்தைப்பனை புதினம் வாசித்தேன். சிறப்பு. கோவையின் பழமையைக் கண்முன் நிழலாட வைத்துள்ளது. அவரின் தொடர்புஎண் கிடைத்தால் பயன் நல்கும்.

என்னுடைய தொடர்பு எண்
9600370671

சு.செல்வக்குமார் said...

மண் மணக்கும் புதினம்