Tuesday, November 16, 2010

கவிஞன்



மலர்கள் சிரித்து மணம்வீச
   மழை பெய்து குளிர்விக்க
இலைகள் காற்றில் அசைந்தாடி
   இன்ப வரவின் புகழ்பாட
அலையும் கானகப் புட்களெலாம்
   அமுத இசையால் வரவேற்க
உலக வாழ்க்கைப் பயணத்தில்
   உவகை சேரப் பாடவந்தேன்!

 இரவும் பகலும் மாறி எந்தன்
   இதய நரம்பை மீட்டிவிடும்!
மறையும் கதிரும் உதயமும்என்
   மனத்தில் சொற்களைக் கூட்டிவரும்!
திரியும் முகிலும் தண்ணிலவும்
   திவ்விய வர்ணனை ஈட்டிவரும்!
வெறியில் கள்ளை மிஞ்சியவை
   வாழ்வின் இனிய நன்கொடைகள்!

தாரகை வானில் பூத்திருக்கத்
   தவழும் அமைதியில் நின்றிருந்தேன்!
கார்முகில் சூழச் சித்திரையில்
   கொட்டும் மழையில் நனைந்திருந்தேன்!
ஆர்த்திடும் அலையை அணைத்தபடி
   ஆழ்கடல் ஓரம் சென்றிருந்தேன்!
பார்த்தவை யெல்லாம் தேரோட்டம்,
   படைத்தவ னுக்கோ கொண்டாட்டம்!

நேற்றை நினைந்து வருந்தாமல்
   வருநாள் எண்ணிக் கலங்காமல்
போற்றும் புகழில் மயங்காமல்
   போலி ஏசலில் துவளாமல்
காற்றில் உலவும் பறவையெனக்
   கட்டுப் பாடுகள் தடையின்றி
ஊற்றுக் கவிதைகள் தந்திடுவேன்,
   உலகைச் சொல்லால் வென்றிடுவேன்!

கொண்டு வந்தவர் யாருமில்லை,
   கூட்டிச் செல்வதும் ஏதுமில்லை!
பண்டு வாழ்ந்தவர் போனதெங்கோ!
   பிறந்து வருபவர் யார் யாரோ!
மண்டும் துயரின் தொட்டிலிலே
   மழலை இன்பம் தவழ்வதனைக்
கண்டு கொண்டவன் ஆதலினால்
   காலம் எனது காலடியில்!

image credit:"Everybody's Hive", Carlos Gershenson- turing.iimas

No comments: