வருணன் மாளிகை முத்துக்களோ- ஒரு
வள்ளல் வழங்கும் சொத்துக்களோ!
கருணை பொங்கும் இயற்கையன்னை- நிதம்
கொட்டும் புன்னகை வித்துக்களோ!
மேகம் அனுப்பிய தூதுவனோ- இம்
மண்ணை அடைந்திடும் சீதனமோ!
சோகம் நிரம்பிய பயிர்மகளை- நிதம்
சொக்கி அணைத்திடும் காதலனோ!
மின்னல் முன்னர் செய்தி சொல்ல- இடி
முழக்கம் வெற்றிச் சந்கொலிக்க
பின்னி இறங்கி வரக் கண்டால்- இப்
புவியின் இதயம் குளிராதோ!
ஆறு குளங்களில் அலைபாட- கதிர்
அசைத்து வயல்களில் சதிராட
ஊர்கள நெடுகிலும் மரகதத்தேர்- அங்கே
உழவர் உள்ளம் களிக்கின்றார்!
image credit:
wunderground.com